சுட்டிகள்



லல்லேஷ்வரி (Lalleshwari)-

லல்லா, லால் டெட் என்று பலவாறாக அழைக்கப்படும் இவர் 14 ஆம் நூற்றாண்டு காஷ்மீரில் வாழ்ந்த சைவ கவிஞர், மெய்ஞானி. கர்நாடகத்தின் அக்காமாதேவியை போல காஷ்மீரியில் மக்கள் மொழியில் இவர் இயற்றியவாக்எனப்படும் குறுங்கவிதைகள் பெரிதும் மதிக்கப்படுபவை. சமூகத்தில் இருந்து முற்றிலும் தனித்து, ஆடைகள் ஏதுமின்றி இவர் அலைந்ததாக கூறப்படுகிறது. எந்த குரு மரபிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத இவரில் காஷ்மீரி சைவத்தின் தாக்கம் மிகுதியாக காணப்படுகிறது.   

கட்வால்/கர்வால் (Garhwal)–

உத்தராகண்ட் மாநிலம் மொழிரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இரண்டு பிரதேசங்களால் ஆனது. நேப்பாளத்தை ஒட்டிய கிழக்கு பகுதி குமாவொன் (Kumaon) என்றும் ஹிமாச்சல பிரதேசத்தை ஒட்டிய மேற்கு பகுதி கர்வால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு பகுதிக்கும் தனித்தனியாக முறையே குமாவொனி, கர்வாலி என்ற மொழிகளும் உண்டு. அழிந்துவரும் கர்வாலி மொழி இன்று ஏறத்தாழ 25 லட்சம் பேரால் பேசப்படுகிறது

ஃபானு (Phanu)–

கொள்ளு வடைகளை இட்டு செய்யும் ஒருவகை கொள்ளுக்கூட்டு. கர்வாலி உணவில் கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது.

தெச்வானி (Thechwani)-

உருளைக்கிழங்கையும் மலைகளில் கிடைக்கும் ஒருவகை உருண்ட முள்ளங்கியையும் சதைத்து, காரமும் உப்பும் சேர்த்து செய்யப்படும் ஒரு பொரியல் வகை.

பைரவி (Bhairavi)  –

கால பைரவனின் பெண் வடிவம். மண்டைஓட்டு மாலை மட்டும்  அணிந்து அகோர ரூபினியாக சித்தரிக்கப்படுபவள். தாந்த்ரீக சாக்தத்தில் பைரவிக்கு மிக முக்கியமான தத்துவ இடம் உண்டு. படைப்புக்கு முந்தைய சித்த இருள் அல்லது இன்மையை பைரவியாக வழிபடுவதாக கொள்ளலாம்.  

சதாசிவன் (Sadasiva)-

ஐந்து தலைகளும் பத்துகைகளும் கொண்டு வழங்கப்படும் சைவ இறைவடிவம். ஞானசக்தியும்- க்ரியாசக்தியும் சம அளவில் திகழும் நிலை. அஹம் (Self) பரிணமிக்கும் நிலை, அதன் குறியீடும் கூட.

கச்சர் (Gachar/Mule)–

கோவேறு கழுதை என்று சொல்லப்படுவது ஒரு ஆண் கழுதைக்கும் ஒரு பெண் குதிரைக்கும் செயற்கையாக இணை வைப்பதால் பிறப்பது. ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாக இவை வரலாற்றில் அறியப்படுகின்றன. குதிரைக்குரிய உடற்கட்டும் கழுதைக்குரிய தாங்கும் திரனும் பெற்றவை.

ரோட் (Roat)–

கோதுமை மாவில் வெல்லமும் சோம்பும் ஏலக்காயும் சேர்த்து செய்யப்படும் அப்பம் போன்ற ஒரு இனிப்பு பண்டம். கர்வாலி திருமணங்களின் போது இவற்றை செய்து உறவனர்களுக்கும் சுற்றங்களுக்கும் அளிப்பது வழக்கம்.

டோல் - டாமௌ (Dhol - Damau)

உத்தராகண்டின் பிரதான் தாள வாத்திய இணை. அந்நிலத்தின் உயிர்நாடியாக எல்லா பண்டிகைகளிலும் விஷேசங்களிலும் ஒலிப்பது.

உத்தராகண்டின் வசந்தகால மலர் பண்டிகை. பெண் குழந்தைகள் வீடு வீடாக சென்று தாங்கள் பறித்து சேகரித்த பூக்களை வீட்டு வாசல்களில் சொரிந்து வாழ்த்தி பாடியும், வீடுகளில் டெயி எனப்படும் அரிசி மாவும் வெல்லமும் சேர்த்து செய்யப்படும் இனிப்பை உண்டும் கொண்டாடப்படுவது

குலதேவதா (Kuladevata)-

உத்தராகண்டின் மத வழிபாட்டில் பெரும்பங்கு வகிப்பது குலதெய்வ  வழிபாடுநர்சிங் தேவ், நைனா தேவி, போலோநாத், சௌமு, ஆச்சாரி என்று ஏராளமான சிறு தெய்வங்கள் கர்வால், குமாவொன் பகுதிகளில் வழிபடப்படுகின்றன.

ஜாகர் (Jaagar)-

மூத்தோர் வழிபாட்டின் பகுதியான ஒரு சடங்குக் கலை. பொதுவாக தெய்வமாக்கப்பட்ட முன்னோரின் கதை இரவு முழுவதும் அதற்கான பாரம்பரிய கலைஞர்களால் பாடப்படும். பாடும்போது சன்னதம் வந்து தெய்வம் அவர்களில் இறங்குவதும், அப்போது ஆசிகள் வழங்குவதும், குறி சொல்லுவதும் நிகழும்.

மசக் பின் (Mashak Been/Bag pipe)-

ஸ்காட்லாந்தின் பேக் பைப் எனப்படும் காற்று வாத்தியம் சிறுமாறுதல்களுடன் கர்வால் பகுதியில் புகழ்பெற்றது. மசக்/மஷக் என்பது தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தோல் பையை குறிக்கும்.

நாத்துலி (Nathuli)-

உத்தராகண்டி பெண்கள் மூக்கில் அணியும் பெரிய வளையம் போன்ற மூக்குத்தி. உத்தராகண்டின் உடைகளிலும் அணிகளிலும் பத்தாம் நூற்றாண்டில் அங்கு குடியேறிய ராஜபுத்திரர்களின் தாக்கம் அதிகம். கர்வாலி பண்பாடே ராஜஸ்தானின் ராஜபுத்திரர்களுக்கும் பண்டைய இமாலய மலைமக்களின் பண்பாட்டுக்கும் நடந்த உரையாடலின் விளைவு எனலாம்.

டெஹ்ரி நாத் (Tehri Nath)-

டெஹ்ரி கர்வால் எனப்படும் கேதார்நாத்தை சுற்றிய பகுதியில் அணியப்படும் நாத்தூலி. சிவப்பு கருப்பு கற்களால் ஆன அலங்காரங்களும், நுண் செதுக்குகளும் அதிகமாக காணப்படும்.

கழுத்தை சுற்றி பெரும்பாலும் வெள்ளியிலும் அறிதாக தங்கத்திலும்  அணியப்படும் தடிமனான வளையம் போன்ற ஆபரணம். திருமணமான பெண்களே இதை  அணிவது வழக்கம்.

குலோபந்த் (Gulobandh)-

கழுத்தை ஒட்டி அணியப்படும், சதுரமான தங்கத்தகடுகள் பதித்த சிகப்பு பட்டை ஆபரணம். இதுவும் திருமண சடங்குகளுடன் தொடர்பு கொண்டது.

மார்ச்சூ/சௌலாய் (Chaulai/Amaranth)-

சௌலாய் என்று ஹிந்தியிலும் அமரந்த் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இந்த பயிர் ஆசியாவில் பல பகுதிகளிலும் பயிரிடப்படும் பழைமையான சிறுதாணிய வகை. பரிமாற்ற பயிராக (Barter crop) முன்பு ஹிமாலயத்தில் அதிகமாக பயிரிடப்பட்டது. இதன் அடர்த்தியான ஊதா சிவப்பு வண்ணம் உலகம் முழுக்க புராணங்களில் மாயத்தன்மை கொண்டதாக குறிப்பிடப்படுவது.

தேவதாரு (Deodar)-

ஹிமாலய மலைப்பகுதியை பிறப்பிடமாக கொண்ட செடார் (Cedar) வகை பெருமரம். ”தேவ மரம்என்று பொருள்படும்  இந்த மரத்துக்கு இந்திய புராணங்களில் உயர்ந்த இடமுண்டு.

கஸ்தூரி மிருக் (Kasthuri Mrig/Musk Deer)-

கொம்புகளற்ற, நீண்ட கோரைப்பற்கள் கொண்ட சிறிய மான் வகை. ஹிமாலய மலைப்பகுதிகளில் இரண்டு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மஸ்க் அல்லது கஸ்தூரி எனும் வாசனை திரவம் இதன் ஆண் மானின் வயிற்றுக்கு அடியில் காணப்படும் சுரப்பியில் இருந்து பெறப்படுவது.

புக்யால் (Bugyal)-

உத்தராகண்டில் காணப்படும் மலைப் புல்வெளிகள். கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடிகளுக்கு மேல் பதினான்காயிரம் அடிகளுக்கு கீழ் உள்ள பகுதிகளில் இவை அமைந்துள்ளன.  

பன்வாலி காந்தா (Panwali Kantha)-

கேதார்நாத் அருகே தொடங்கி பிலங்கனா பள்ளத்தாக்கு வரை விரியும் பெரிய புல்வெளி பிரதேசம்.

ப்ஹரல் (Bharal)-

ஹிமாலயத்திலிருந்து ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் மலையாடு. பரிணாம ரீதியாக இவை செம்மறிக்கும் வெள்ளாட்டுக்கும் இடைப்பட்டவை. ஆண் விலங்குகளுக்கு பெரிய வளைந்த கொம்புகள் காணப்படும்.

போட்டியா (Bhotiya)-

திபத்திய பூர்வீகம் கொண்ட நாடோடி மேய்ச்சல் சமூகம். ஆடுகள் மட்டுமே இவர்கள் மேய்ப்பது வழக்கம்.

பிலங்கனா நதி (Bhilangna River)-

கங்கையின் ஊற்று நதிகளில் ஒன்றான இது கேதார்நாத்திற்கும் கங்கோத்ரி மலைகளுக்கும் இடையேயான காட்லிங் (Khatling) எனும் கிளேசியர் பனி உருகுவதால் தோன்றுகிறது. பிலங்கனா பள்ளத்தாக்கில் ஒழுகி மற்றொரு தோற்று நதியான பாகீரதியில் இணைகிறது.

நந்தா தேவி (Nanda devi)-

வெகுகாலம் உலகின் மிக உயரமான மலையாக கருதப்பட்டது. உத்தராக்கண்டின் புகழ்பெற்ற இரட்டை சிகரங்களான இவை சகோதரிகளாக நந்தா, சுனந்தா என்றும் அழைப்படுவதுண்டு. நந்தா தேவி உத்தராகண்ட் மக்களின் காவல் தேவியாகவும் சிவனை மணந்த பார்வதியின் தோற்றமாகவும் கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நந்தா தேவி ராஜ் ஜாட் என்னும் விழா மீனாட்சி கல்யாணத்தை ஒத்தது.   

கங்கீ (Gangi)-

பிலங்கனா பள்ளத்தாக்கில் அமைந்த சிற்றூர், பன்வாலி காந்தா புக்யால் அருகே அமைந்துள்ளது.

வன்குஜ்ஜார் (Vangujjaar)-

உத்தராகண்டின் சற்று கீழ்மட்டத்தில் அமைந்த காடுகளில் எருமைகளை மட்டும் மேய்த்து வாழும் நாடோடி சமூகம்.

பட்ஹு கி டால் (Badhu ki Dal)-

பட்ஹு எனப்படும் பிரத்யேக உலோக பானையில் செய்யப்படும் டால் உணவு. உளுந்தும் ராஜ்மாவும் இதில் பிரதானமாக சேர்க்கப்படும்.

ராஜ்மா (Rajma/Red Kidney Bean)-

ஹிமாலயத்தில் பரவலாக உண்ணப்படும் பயறு வகை. சிவப்பாகவும் கடினமான தோலுடனும் காணப்படும்.

மண்டுவா ரொட்டி (Mandua/Raggi Roti)-

கேழ்வரகு ரொட்டி. உத்தராகண்டின் பிரபலமான பொது உணவு.

லிங்குடே சப்ஜி(Lingude/Fiddlehead Fern)-

பெரணி செடிகளில் ஒரு வகையான ஃபிடில் ஹெட் பெரணியில் செய்யப்படும் பொரியல் வகை. சுருண்டு நிற்கும் அதன் இளம் குருத்தையும் தளிரிலையையும் இதற்கு பயன்படுத்துவர். ஐரோப்பாவிலும் இந்த வகை பெரணி வேறு முறைகளில் உணவாக கொள்ளப்படுகிறது.

லால் சாவல் (Lal Chaval/Red Rice)-

சிவப்பு நிறத்தில் சற்றே தவிடுடன் காணப்படும் உருண்ட மலை அரிசி.

அலூ குட்கே (Aloo Gutke)-

உத்தராகண்டில் செய்யப்படும் உருளைக்கிழங்கு பொரியல்.

கன்டாலி சாக் (Kandali Saag) –

செந்தட்டி செடியின் (Stinging Nettle) பிஞ்சு இலைகளை நீரில் கொதிக்கவைத்து இரண்டு மூன்று முறை அலசி வைக்கப்படும் கீரைக்கூட்டு. உத்தராகண்டிற்கே உரிய சிறப்புணவுகளில் ஒன்று.

ஜீது பகட்வால் (Jeetu Bagadwal) –

கர்வால் பகுதியின் முக்கியமான நாட்டுப்புற கதைகளில் ஒன்று ஜீது பகட்வால் உடையது. பெருவீரனான இவனை மாத்ரிகள் மயக்கி கொண்டு சென்று கொன்றதாகவே பொதுவாக கதைகளில் கூறப்படுகிறது.

ஐப்பன் (Aipan)-

உத்தரகண்டின் முக்கியமான பாரம்பரிய வரைகலையாக கருதப்படும் வாயிற்கோலம். சிவப்பாக மெழுகிய தரையில் ஈரமான அரிசி மாவைக்கொண்டு மிக நுண்மையான அலங்கார வேலைப்பாடுகளுடன் வரையப்படுபவை.  

பங்கோரா (Banghora) –

உத்தராகண்டின் பாரம்பரிய இசை வாத்தியங்களில் ஒன்று. மூன்று முதல் நான்கடி வரை நீளம் கொண்ட செம்பில் செய்யப்பட்ட கொம்பு வாத்தியம். இதை குலதேவதா சடங்குளிலும் பிற விழாக்களிலும் வாசிப்பார்கள்.

ரத் (Rath)-

கடவுள் உருவை வைத்து பல்லக்கு போல சுமந்து செல்லப்படும் சப்பரம். பொதுவாக குலதேவதாக்கள் கிராமத்தை சுற்றி இவ்வாறு எடுத்து செல்லப்படும். அப்போது வழியில் நின்று மக்களின் குறைகளை கேட்பதும், சப்பரத்தை பிடித்திருப்பவர்கள் மெல்ல அசைப்பதன் வழியே ஆம்” ”இல்லைஎன்று மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் நிகழும்.

மோனல் (Monal)-

வர்ணக்கோழி/பெசண்ட் (Pheasant) வகையை சேர்ந்த பறவை. ஆண் பறவையின் உடல் மணி நீலமாகவும், கழுத்தில் சிவப்பு தீற்றலுடனும், வால் பகுதி ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். பெண்பறவை தவிட்டு நிறத்தில் வண்ணங்களின்றி காணப்படும். உத்தராகண்டின் மாநில பறவையாக அறிவிக்கப்பட்டது.

பஹாடி (Pahadi)-

வட இந்தியாவில் ஹிமாலய மலைமக்களையும் அவர்களது மொழி, பண்பாட்டையும் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். பஹாட் என்றால் மலை என்று அர்த்தம். பஹாடி மொழிகள், பஹாடி ராகம், பஹாடி சித்திரக்கலை, பஹாடி உணவு என்று ஏராளமான பிரயோகங்கள் கொண்டது. பஹாடி மக்கள் சமநிலத்தை சார்ந்தவர்களை தேசி (Desi) என்று அழைக்கின்றனர்.

கௌரிகுந்த் (Gaurikund) –

சோன்ப்ரயாகில் இருந்து கேதார்நாத் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூர். கர்வாலி மக்களின் ஐதீகத்தின்படி சிவனிடம் இணைவதற்காக பார்வதி தேவி கடுந்தவம் புரிந்த இடம் இதுவே. சிவன் தன் காதலை ஒப்புக்கொண்ட இடமும் கூட. இங்குள்ள வெண்ணீர் குட்டைகள் புகழ்பெற்றவை. குண்டம் என்பது குளம் அல்லது சிறிய நீர்நிலையை குறிக்கும். குண்டலினி எனும் சொல்லுக்கும் இதுவே வேர்ச்சொல்.  கௌரி என்பது சக்தியின் ஒரு வடிவம். வெண்மை, ஒளி, பிரகாசம் என்னும் அர்த்தங்களும் உண்டு









Post a Comment

0 Comments